வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உரிய முறைமைகளின் படி, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றால், நாடு கடந்த பிரச்சினைகளில் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் உள்ள அடிமை முகாம்களுக்கு இலங்கையர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் சைபர் குற்றப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்கள் தொடர்பில் அண்மையில் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கையர்களை அந்த முகாம்களுக்கு கடத்துவதற்கு தலைமை தாங்கிய சீன பிரஜையான பிரதான சந்தேக நபர் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் 56 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறித்த முகாமில் இருக்கலாம் என மியன்மாருக்கான முன்னாள் தூதுவரின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் ஆட்கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சீனர்களே பிரதானமாக செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.