இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.
ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு வந்தது. இதன் காரணமாக இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களை மிக அதிக அளவில் மனரீதியாக பாதித்திருக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா மூவரும் தோல்வியை மறந்து செயல்பட்டால் மட்டுமே, இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்கின்ற சோக வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இது கடந்த காலத்தில் நடந்தது. உண்மையில் எங்களுக்கு இதை ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் அதிலிருந்து தற்பொழுது வெளியே வந்து விட்டோம்.
எங்களுக்கு முன்னால் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறது. நாங்கள் அதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்கள் வீரர்கள் இப்படியான விஷயங்களில் இருந்து நகர்ந்து வந்து செயலாற்றுவதில் திறமையானவர்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறை தோல்வி அடையும் பொழுதும் ஏமாற்றமடைகிறீர்கள். ஆனால் நீங்கள் அடுத்த இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். எனவே கடந்த கால ஏமாற்றங்களோடு உங்களால் நின்று விட முடியாது.
இதை நீங்கள் குழந்தையிலிருந்து கற்றுக் கொண்டு வருகிறீர்கள். கடந்த கால ஏமாற்றங்களை நீங்கள் நிகழ்காலத்தில் அனுமதித்தால் வெற்றியடைய முடியாது.
இந்தியாவுக்காக விளையாட ஒரு வீரரை நான் ஊக்குவிக்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. எங்கள் வீரர்கள் யாருக்கும் ஊக்கம் குறைவாக இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை.
இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா வந்து நல்ல கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதற்காக நான் யாரையும் ஊக்குவிக்க வேண்டியது கிடையாது.
எனக்கு வீரர்களை ஊக்குவிப்பதில் நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு சரியான சூழலை உருவாக்குதல், சரியான செயல்முறைகளை உறுதி செய்தல், அவர்கள் நன்றாக பயிற்சி செய்வதை கண்காணித்து உறுதிப்படுத்துவது, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், திட்ட ரீதியாகவும் எல்லாவற்றையும் சரியாக வைத்துக் கொள்வதுதான் என்னுடைய வேலை. அணியில் சுயமாகவே ஊக்கம் உள்ள வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.