ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட உள்ள பரந்தப்பட்ட கூட்டணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமைய உள்ள கூட்டணி குறித்து ஜனாதிபதி தரப்பு அஞ்சுவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டணி உருவாகுவதைத் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட சிலருக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எடுத்துரைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் இந்த புதிய கூட்டணியே வெற்றி பெறும் என்பதை அரசாங்கமும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனவும், சந்திப்பில் கலந்துகொண்ட எம்.பிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிராக எவரேனும் கருத்து தெரிவித்தால் அவர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறானவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பரந்தப்பட்ட கூட்டணியொன்று அமைக்கப்படும். அதற்கு எதிராக எவராவது செயற்பட்டால் கடுமையான தீர்மானங்களை எடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய கூட்டணிக்கு எதிராக எவராவது இருப்பின், செயற்குழுவில் கைகளை உயர்த்துமாறும் கோரப்பட்டுள்ளது, அதற்கு எதிராக எம்.பி.க்கள் எவரும் கை உயர்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, கூட்டணியை அமைப்பதற்கான அனைத்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கவும் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.