சவூதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா

சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்களை விற்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் சிலவற்றை அமெரிக்கா நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்கள் விற்கக்கூடாது என்று தடைவிதித்தார்.

ஏமனில் உள்ள பொதுமக்கள் மீது அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு சவூதி அரேபியா தாக்குதல் நடத்துவதாகவும் சவூதியின் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் பைடன் குற்றஞ்சாட்டினார்.

தற்போது ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகளுடன் சவூதி அரேபியா அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு மன்றம் தகவலை வெளியிட மறுத்துள்ளது.

தடை எப்போது விலக்கப்படும் என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

சவூதி அரேபியாவுக்கு தெற்கில் உள்ளது செங்கடல். அதன் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்துவதால் அது உலக அளவில் வர்த்தகத்திற்கு தலைவலியாக உள்ளது.

இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கூறி செங்கடலில் வரும் கப்பல்களைத் தாக்குவதாக காரணம் சொல்கிறது ஹவுத்தி படை.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஹவுத்தி படைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே சண்டை நீடிக்கிறது. இதில் இரு தரப்பும் சண்டை நடக்கும் போது மனிதாபிமான சட்டங்களை மீறினவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

சண்டையை நிறுத்திவிட்டு பொருளியல் முதலீடுகள் மீது சவூதி அரேபியா அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சவூதி மீதான ஆயுத தடையை அமெரிக்கா நீக்கிவிட்டால் வா‌ஷிங்டனிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா மீண்டும் இடம்பிடிக்கும்.

Recommended For You

About the Author: admin