தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை வழங்காமையால் இன்று (29) 80% தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து கடந்த மாதம் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தபட்டதன் காரணமாக தனியார் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன .
பாடசாலை அலுவலக நடவடிக்கைகள் நடைபெறும் நாளில் பேருந்து சேவைகள் தடைபடுவதால் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை சேவை நிறுத்தம்
இதேவேளை போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து சேவையான ‘பாடசாலை சேவை’, தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்று முதல்சேவையை நிறுத்த வேண்டியுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரூந்துச் சேவையின் முதற்கட்டத்தின் கீழ், மேல் மாகாணத்துக்குள் 47 வழித்தடங்களில் 130 பேருந்துகள் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன, ஆனால் கடந்த 23 ஆம் திகதி முதல் லங்கம டிப்போ முழு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கவில்லை, எனவே ‘பாடசாலை சேவை’ இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.