பௌத்த சமயத்திற்கு இணைய வழியாக அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட சமூக வலைத்தள கணக்குகளின் விபரங்களை பெற்றுக்கொடுக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
“புஸ் புத்தா” (Puss Buddha), போலோவர்ஸ் ஒஃப் புஸ் புத்தா (Followers of Puss Buddha) போன்ற பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து, அதனூடாக பௌத்த சமயத்திற்கும், புத்த பெருமானுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்துள்ளார்.