இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த பங்களாதேஷ் பிரஜை ஒருவரை நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த நபர் குவைத்தில் இருந்து அல் ஜசீரா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நாட்டிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்காக விமான நிலைய குடிவரவு சோதனை நிலையத்தில் கடமையாற்றிய குடிவரவு அதிகாரியிடம் இலங்கை கடவுச்சீட்டையும் தேவையான ஏனைய ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.
போலி ஆவணங்கள்
இதன்போது கடவுச்சீட்டை அவதானித்த குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள் கடவுச்சீட்டில் இருந்த புகைப்படம் போலியானது எனவும், இது இலங்கையர் ஒருவருடைய தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு எனவும், உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குவைத் தூதரகம் வழங்கிய அடையாளச் சான்றிதழைக் கண்டறிவதற்காக, அவரது பணப்பை மற்றும் பயண பொதி என்பனவற்றை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்த ஏற்பாடு
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பங்களாதேஷ் பிரஜை குவைத்தில் உள்ள தரகர் ஊடாக இலங்கை வருவதற்கு போலி கடவுச்சீட்டை தயார் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை அவர் வந்த விமானத்திலேயே நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்