டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடனும், மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி உயரத்துடன் 29 மாடிகளுடனும் கட்டப்பட்டது. ரூ.1200 கோடி மதிப்பிலான இந்த கட்டிடங்கள் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.
மேலும் இங்கு குடியிருப்புகளை வாங்கிய பொதுமக்களுக்கு 14 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கோர்ட்டு அறிவுறுத்தியது. சூப்பர் டெக் நிறுவனம் கட்டிய இந்த இரட்டை கோபுர கட்டிடத்தை ஆகஸ்டு 28-ந்தேதி இடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கட்டிடங்களை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
கட்டிட இடிப்பு பணி மும்பையை சேர்ந்த எடிபைஸ் என்ஜினீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இரு கட்டிடங்களிலும் ஆங்காங்கே துளையிட்டு வெடிபொருட்களை நிரப்பும் பணி கடந்த 22-ந் தேதி முடிவடைந்தது. மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தூண்களில் 7 ஆயிரம் துளைகள் போடப்பட்டுள்ளது. பிரமாண்டமாக இரட்டை கோபுர கட்டிடங்களை இடிக்க 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், நீர்வீழ்ச்சி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இரட்டை மாடி கட்டடம் தகர்க்கப்பட்டது. டெல்லி அருகே நொய்டாவில் இரட்டைக் கட்டங்கள் தகர்க்கப்பட்டதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.