அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களை மீளப்பெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நாட்டில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அந்தக் காலப்பகுதியில், தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் விலைமதிக்க முடியாத சேவையாற்றப்படுகின்றது.
கடந்த 12 ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் பேரிடர் ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பது குறித்து நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு அதிரடிப்படை வீரர்களால் காப்பாற்றப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல்.
அதுமட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்களில் வாகனங்களை சோதனையிட்டு நாட்டில் நடக்கும் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்தநிலையில் பாதாள உலக குழுக்களை ஒடுக்கும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களை நெடுஞ்சாலை கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.