சிறுவன் சடலமாக மீட்பு; மதரஸா நிர்வாகி கைது

மட்டக்களப்பு – காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் எனும் 13 வயது மாணவன் மலசலகூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை – சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், மதரஸா நிர்வாகியாகிய மௌலவி சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கெனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டர்.

இதேவேளை, அம்பாறை – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண், கடந்த சனிக்கிழமை (02) கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அப்பெண் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin