வங்காள விரிகுடாவில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மிக்ஜாம் சூறாவளி மீண்டும் வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (05) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவாக பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி
இதேவேளை, வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் சூறாவளி சென்னை அருகே நிலை கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பருவ மழை காலத்தில் முதல் சூறாவளியானது தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சார்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல இடங்களில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor