கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இளம் பெண் ஒருவர் வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்தமை சந்தேகத்திற்கிடமான மரணமாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் வேறு திசையில் சென்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
நவம்பர் 24ஆம் திகதி, ஹெந்தல பலகல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய திருமணமாகாத பெண் குளியலறையில் விழுந்து உயிரிழந்ததாக பெண்ணின் தந்தை வத்தளை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ராகம பொது வைத்தியசாலையில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னர், மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சட்ட வைத்திய அதிகாரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, பதில் நீதவான் ஹிலாரியன் குணவர்தன தலைமையில் நேற்று சம்பந்தப்பட்ட நீதவான் விசாரணை நடத்தப்படவிருந்தது.
அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி ஆஜராகாததால், உரிய பிரேத பரிசோதனை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வத்தளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.