அம்பாறை நிந்தவூரில் கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வினை நோக்கி நகர்வதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் பிரதேச கடலரிப்பானது கடந்த 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக தென்னந்தோப்புகள், விவசாய காணிகள், மீன்பிடி வாடிகளென காவுகொண்டு இப்பொழுது குடியிருப்பு பகுதிகளை காவுகொள்ள எத்தனித்திருக்கின்றது.

கடலரிப்புக்கான நிரந்தர தீர்வு

இதற்கான தற்காலிக தீர்வுகளை நிந்தவூர் பிரதேச சபை, கரையோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஊர் சார்ந்த அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இந்நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திவிடாமல் இக்கடலரிப்பிற்கான நிரந்தர தீர்வுக்கு சாத்தியமான செயற்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்குமாறு துறையில் நிபுணத்துவமுள்ள சிரேஷ்ட பொறியிலாளர்களை உள்ளடக்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆலோசனை மையத்திடம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆய்வுகள் மேற்கொள்ள தீர்மானம்

இதில் கலந்து கொண்டிருந்த துறைசார் நிபுணர்கள், “இக்கடலரிப்பினை தடுப்பதற்காக குறித்த பிரதேசத்தின் கடல் பரப்பில் நீரோட்ட அளவினை பருவகாலத்திற்கேற்ப கணிப்பீடு செய்வதன் மூலமே நிரந்தர தீர்வை நோக்கி நகர முடியும்.

இதற்காக நிலையான ஆய்வினை தென்கிழக்கு பல்கலைக்கழகம், கடலோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துடன் இணைந்து செய்து நிரந்தர தீர்வினை நோக்கிய திட்டத்தை தயாரிப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பணிப்புரையில் பொறியியல் பீட நிபுணர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், நிந்தவூர் பிரதேச சபை கெளரவ உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் எஸ்.ஐ.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor