முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (02.11.2023) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 13 அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின் போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரின் சொத்து விபரங்களையே சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் டிசம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை முழுமைப்படுத்த முடியாத நால்வருக்கே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.