நாடு முழுவதிலுமுள்ள அரிசி ஆலைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஈடுபட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அரிசி ஆலைகள், சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்வது மற்றும் சுற்றாடல் மாசடைவதை தடுக்கும் வகையிலான வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட நோக்கில், இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி
சுற்றாடல் அமைச்சு 27,01,2022 இல், வெளியிட்ட வர்த்தமானியில் அரிசி ஆலைகள் அமைய வேண்டிய இடங்கள், அந்த ஆலைகள் கொண்டிருக்க வேண்டிய நிலப்பரப்புக்களை ஏ,பி,சீ என வரையறை செய்துள்ளது.
இந்த வரையறைகளுக்குட்பட்ட ஆலைகளுக்கே சுற்றாடல் அமைச்சு அனுமதி வழங்குகின்றது. இந்த வரையறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகள் சட்டவிரோதமாகவே கருதப்படும்.
எனவே, இவ்வாறான சட்டவிரோத அரிசி ஆலைகள் மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கள ஆய்விலும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஈடுபட்டுள்ளது.
பொதுவாக, அரிசி ஆலைகளால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கே நாடு பூராகவுமுள்ள ஆலைகளில் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரிசி ஆலைகளால் ஏற்படும் சூழல் மாசு
வர்த்தமானியின் விதிகளுக்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகளால் ஏற்படும் கழிவுகளால் சூழல் மாசடைவதை உச்சளவில் குறைப்பதற்கான தொழினுட்ப உதவி,ஒத்துழைப்புக்கள் இந்த ஆலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகார சபை இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வர்த்தமானி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஆலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
இவ்வாறான ஆலைகள்,சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை இல்லாதொழிக்க உடனடி ஏற்பாடுகளைச் செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அமைச்சர் நஸீர் அஹமட் பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இவ்வாறான ஆலைகள் மீது அவசரமாக அதீத கவனம் செலுத்துமாறும் அமைச்சரால் பணிக்கப்பட்டுள்ளது. வாராந்தம் அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலிலே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, ஆலோசகர் கருனாசேன ஹெட்டியாராய்ச்சி,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜெயசிங்க உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.