சந்தோஷ் நாராயணனால் My Dream Academy அங்குரார்ப்பணம் : 1000 மாணவர்களுக்கு இலவச கணனி கற்கைநெறிகள்

யாழ். மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி “மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது.

இதன் ஓர் அங்கமாக, யாழ். மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும் இலவசமான Coding கற்கைநெறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் நடைபெற்றது.

 

யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக, தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன் அவர்தம் பாரியார் மீனாட்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராஜாவும் கலந்துகொண்டு கற்கைநெறிகளை ஆரம்பித்து வைத்தனர்.

 

சிறப்பு விருந்தினராக யாழ். மாநகர சபையின் ஆணையாளர்  இ.த.ஜெயசீலனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கியிருந்தார்கள்.

 

இக்கற்கைநெறிகளை யாழ். மாவட்டத்தில் வழங்குவதற்காக அங்கஜன் இராமநாதனின் “என் கனவு யாழ்” அறக்கட்டளையுடன்  பாராளுமன்ற உறுப்பினர் Dhammika Perera – டிபி எடியுகேசன் அறக்கட்டளை கைகோர்த்துள்ளது.

 

இதனூடாக கணனி கற்கையை இலவசமாக இளையோருக்கு வழங்குவதற்காக “டிபி ஐடி கம்பஸ்” எனும் கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சுமார் 1200 மாணவர்கள் வருடாந்தம் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முதலாவது My Dream Academy ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இக்கற்கைநெறியானது, Code.org, Thunkable, Microbit, Pictoblox, Glitch உள்ளிட்ட தளங்களோடு இணைந்து உருவாக்கப்பட்ட தரம்வாய்ந்த 300க்கு மேற்பட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு 8 பாடத்திட்டங்களையும் நிறைவு செய்யும்போது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்வார்கள்.

 

இக்கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தப்படும் கற்கைநெறிகளை தொடரும் வாய்ப்புகள் இதனூடாக வழங்கப்படவுள்ளன.

 

நாடுமுழுவதும் அடுத்தாண்டுக்குள் 1 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தினூடாக ஒவ்வொரு மாணவரும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இக்கற்றைநெறியை முற்றிலும் இலவசமாக தொடரவுள்ளார்கள்.

மீண்டும் கல்வியில் முதலிடம் என்ற எமது இலக்கை நோக்கிய பயணத்தின் மிக முக்கியமான தடமாக, யாழ் மாவட்ட மாணவர்களை தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சியடைந்தவர்களாக உருவாக்கி அதனூடாக சர்வதேச தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் My Dream Academy செயற்படவுள்ளது.

 

 

Recommended For You

About the Author: S.R.KARAN