கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பை கடற்றொழிலாளர்கள் சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்தது.
மண்ணெண்ணையின் விலையேற்றம் தொடர்பிலும் மீள்பரிசீலனை
இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தமது தொழில் செயற்பாடுகளுக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசல் போன்றவை தாராளமாக கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மண்ணெண்ணையின் விலையேற்றம் தொடர்பிலும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டதுடன், ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை, குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது
கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
இதன்போது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அவை தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுவை 2020ம் ஆண்டு பொறுப்பெடுத்த சிறிது காலத்திலேயே மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த இரண்டு கல்வி வலயங்களை உருவாக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருந்த அமைச்சர் டக்ளஸ், புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோரை தனித்தனிக் குழுக்களாகச் சந்தித்து அந்தந்த வலயங்களின் தேவைகள் குறித்து விசேடமாக ஆராய்ந்துள்ளார்.
இதன்போது, வலயக கல்விப் பணிமனை மட்டத்திலான தேவைகள் முதற்கொண்டு, பாடசாலைகளின் பௌதீக, ஆளணி மற்றும் இதர பற்றாக்குறைகள், உடனடியாக நிறைவேற்றப்படவேண்டிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடிய அமைச்சர், அவற்றுக்கான தீர்வை படிப்படியாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.