கலாசார அலுவல்கள் அமைச்சின்
கீழ் இயங்கி வருகின்ற டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில்
அபேக்ஷா தமிழ் நாடகத் திருவிழா முதற்தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைடைபெறவுள்ளது.
யாழ். வலிகாமம் வலயத்திற்குட்பட்ட யூனியன் கல்லூரியில் எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
இவ் நாடகத் திருவாழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கலாசார அமைச்சின் நாடக மத்திய நிலையமாக விளங்கும் டவர் மண்டபத்தின் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(20-10-2023) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கலைத்துறையின் மேம்பாட்டிற்காகவும் கலைஞர்களின் கௌரவத்திற்காகவுமே டவர் மண்டப அரங்க மன்றம் செயற்பட்டு வருகின்றது.
கொழும்பில் எல்பிஸ்டன் மற்றும் டவர் அரங்கில் வருடந்தோறும் நடைபெறுகிற நாடக திருவிழாவானது டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளோம்.
இங்குள்ள பாடசாலை மாணவர்களின் நாடகத் திறமைகளையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காகவும் அபேக்ஷா யாழ் தமிழ் நாடகத் திருவிழா எனும் தொனிப் பொருளில் முதற்தடவையாக இவ் நாடக விழா இம் மாதம் எதிர்வரும் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்கள்
காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை யாழ் யூனியன் கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.
இதில் யாழ்ப்பாணத்திலுள்ள கல்வி வலயங்களில் நாடகமும் அரங்கியல்துறை ஆசிரிய ஆலோசகர்களையும், இப் பாடத்தினை கற்பிக்கின்ற ஆசிரியர்களையும், உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினைக் கற்கும் மாணவர்களை் உட்பட துறைசார்ந்த அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
இங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நாடகத் திருவிழாவில் டவர் மண்டப அரங்க மன்ற பாடசாலை மாணவர்களின் நாடகங்களும் வலிகாமம் பிரதேசத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடக ஆசிரியர்களினது நாடகங்கள் உட்பட நாடக ஆளுமைகள் பலரதும் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட இருக்கின்றது.
இங்குள்ளவர்ளிற்காகவே டவர் மண்டப அரங்க மன்றம் தமிழ் மொழி மூலமான நாடக விழாவை முதற் தடவையாக யாழில் நடாத்துகிற போது அதற்கு அனைவரும் ஆதரவை வழங்கி நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டுமென ஜெயப்பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார்.