இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது அத்துமீறலைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியாவிற்கு செல்லும் பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும் நடவடிக்கை இன்று (18-10-2023) பதன்கிழமை பருத்தித்துறை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய மீனவர்களது எல்லை தாண்டிய அத்துமீறல் காரணமாக வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகள் எவையும் வெற்றி பெறாத நிலையில் வடக்கு கடற்றொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தியாவிற்கு படகு மூலம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும் நடவடிக்கை பருத்தித்துறை முனை பகுதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பகுதியிலுள்ள சில மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து குறித்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
“இந்திய இழுவைப் படகுகள் எல்லை தாண்டி சட்டவிரோதமாக எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து தொழில் செய்வதைத் தடுப்பதற்காக இந்தியா சென்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கடற்றொழில் வளம் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள், கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த வடக்கு கடற்றொழில் சம்மேளனம், சமாசங்கள் தீர்மானித்துள்ளன. அதற்கான பயணச் செலவுக்காக நிதி சேகரிக்கப்படுகிறது.
இதற்கு தங்களினாலான உதவிகளை வழங்கி உதவுமாறு கோருகின்றோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட உண்டியலினை ஏந்தி குறித்த நிதி சேகரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இந்தப் பயணத்தில் ஊடகவியலாளர்களையும் இணைந்து கொள்ளுமாறும் இந்தியா வரை தம்முடன் பயணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.