வடக்கு மாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை முன்வைப்பு.
கடந்த 2023.10.15 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர், வடமாகாணத்திலுள்ள விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் பலவற்றை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர்.
இந்த தருணம் விவசாய அமைச்சரோடு சேர்ந்து செயற்படுத்துவதற்கு உகந்த தருணமாக இருக்கின்றது என்று கூறிய ஆளுநர் மேலும் வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையில் விவசாய உத்தியோகத்தர்கள் – 20, விவசாய போதனாசிரியர்கள் – 30, கால்நடை வைத்திய அதிகாரிகள் – 30, கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் – 25 ஆகிய வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது விவசாயத்துறையில் பெரும் சவாலாக காணப்படுகின்றது. குறிப்பாக வடமாகாணத்திலுள்ள கால்நடை வைத்தியசாலைகளுக்கு 14 வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இவ்வாறன நிர்வாகப்பிரச்சினைகள் விவசாயத்துறையில் குறைபாடாக காணப்படுகின்றது.
மேலும் உரையாற்றிய ஆளுநர் கடந்த வாரம் தான் நீர்வேலியிலுள்ள விவசாய வீதிக்கு சென்ற போது அங்கே நின்ற விவசாயிகள் சிலருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் வாழை, பப்பாசி, மிளகாய், பீற்றூட் முதலிய பல்வேறுபட்ட பயிர்வகைகளை செய்துவருகிறார்கள். அவர்களிடம் ஒரு பப்பாசி என்ன விலை எனக் கேட்டபோது ஒரு கிலோ 20 ரூபா எனக் கூறினார்கள். இந்த விலையை நகரச்சந்தைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபாடாக உள்ளது.
அவர்கள் மிகவும் பாடுபட்டு உழைத்து சிறந்த உற்பத்திகளை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கான சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அதிகமாக இந்தப்பிரச்சினை இங்கு நிலவுகின்றது. அதேவேளை ஏற்றுமதி மற்றும் தரநிர்ணயப்பிரச்சினை எமது மாகாணத்தில் அதிகமாக காணப்படுகின்றது.
கொழும்பிலுள்ள இலங்கை கட்டளைத் திணைக்களத்துடன் விவசாயிகள் தொடர்புகொள்வதற்கு தூரம், மொழி என்பன பெரும் சவாலாக காணப்படுகின்றது. அதேபோல் ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை விவசாயிகளுக்கு உள்ளது. எனவே சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றை இலகுபடுத்துவதற்கு விசேட திட்டங்களை மேற்கொண்டு செயற்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு முழுமையான பலனை பெற்றுக்கொடுக்க முடியும்.
எமது மாகாணத்தில் கால்நடைகள் வீதிகளின் குறுக்கே செல்வதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை நாம் அறிகின்றோம். இவற்றை தடுப்பதற்கு கால்நடை மேய்ச்சலுக்குரிய முறையான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் கால்நடை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் பண்ணையாளர்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
ஏற்கனவே விவசாயம் சார்ந்த சிறந்த செயற்பாடுகளை கௌரவ விவசாய அமைச்சர் எமது மாகாணத்தில் மேற்கொண்டுள்ளார். அதேபோல் தொடர்ந்து தான் கூறிய விடயங்களை கருத்திற்கொண்டு இதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தருவார் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது என்று ஆளுநர் கூறியிருந்தார்.