தீபாவளி முற்பணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை கடிதம், பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இன்று (16) கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்ணியின் ஹட்டன் பிதேச செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
” நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே 15 ஆயிரம் ரூபா போதாது, இம்முறை 20 ஆயிரம் ரூபா கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயம் போட்டியிடுவார்.
அவரின் வெற்றி உறுதி. அதன்பின்னர் நாட்டுக்கும், மலையக மக்களுக்கும் சிறப்பான சேவைகள் முன்னெடுக்கப்படும். நான் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதி அல்லன். மக்களோடு மக்களாக இருந்து அரசியலுக்கு வந்தவன்.
எனவே மக்களின் வலி தெரியும். மக்களை கைவிட்டுவிட்டு அரசியல் நடத்தும் திட்டம் ஒருபோதும் எம்மிடம் இல்லை. நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.
அடுத்து எங்கள் ஆட்சி வரும், மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுகொடுப்பதும், பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவதும் நிச்சயம் நடைபெறும். அதற்கான உறுதிமொழியை சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார் ” எனவும் தெரிவித்துள்ளார்.