யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை, வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும், பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திடீர் சோதனை நடவடிக்கை

இந்நிலையில் முட்டைகளின் விலைகளை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்பனை செய்யாமல் அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனடிப்படையில், யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் நேற்று(22) யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கல்வியங்காடு போன்ற பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

விற்பனையாளர்களுக்கான அறிவிப்பு

இதன்போது, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor