இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவு
இதற்கமைய, கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கியூ.ஆர் குறியீட்டு அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றமை அரசுக்கு பெரும் சேமிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் 6 மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலே அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,நாடு முழுவதும் உள்ள 93 சதவீதமான எரிபொருள் நிலையங்கள் கியூ.ஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமையை செயல்படுத்தியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.