நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (03.10.2023) முதல் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகூடிய மழைவீழ்ச்சி
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 69.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனிடையே, நில்வளா கங்கையின் வௌ்ளநீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறை, அக்குரஸ்ஸ, மாலிம்பட, அத்துரலிய, கம்புறுப்பிட்டிய, திஹகொட உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கங்கைகளின் நீர்மட்டம்
அத்தனகலு ஓயா, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டமும் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழையுடனான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.