கல்வியியல் கல்லூரிகளுக்கு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இணைத்துகொள்ள இருக்கிறோம். அதேபோன்று 2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு ஓர் இரு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த (20.09.2023) ஆம் திகதி வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ரோஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி எழுப்பிய ரோஹினி குமாரி கவிரத்ன
2019, 20ஆம் ஆண்டுக்காக கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக இதுவரை மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. அவர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று 2021ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது. 4 வருடங்களாக மாணவர்கள் பரீட்சை எழுதிவிட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் கல்வியியல் கல்லூரிகளில் தற்போது ஒரே ஒரு ஆண்டு மாணவர்களே பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்த வருடம் பயிற்சி பெற்று வெளியேற ஆசிரியர்கள் இல்லை. மீண்டும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வெளியேற இருப்பது 2025 ஆகும்.
அதனால் 2019, 20, 21ஆம் ஆண்டு மாணவர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு விரைவாக இணைத்துக்கொள்ள முடியாமல் போனால் மீண்டும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 2029ஆம் ஆண்டிலேயே வெளியேறுவார்கள்.அதனால் இது தொடர்பாக எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என்றார்.
அமைச்சர் கூறிய பதில்
2019, 20ஆம் ஆண்டுகளில் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவாகி இருக்கும் 1400 மாணவர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களை 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு பிரிக்கப்பட்டிருக்கிறோம்.
2ஆம் ஆண்டு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு முடிவடைந்து தற்போது மேற்பார்வை இடம்பெற்று வருகிறது. இந்த நடவடிக்கை முடிவடைந்ததுடன் அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த மாணவர்கள் அனைவரையும் 19 பீடங்களுக்கும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அத்துடன் 2021 குழுவை கல்வியியல் கல்லூரிகளில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றார்.