ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வு நேற்று(19.09.2023) அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது.
குறித்த அமர்வில் இணைந்து கொள்வதற்காக ஐ.நா தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்றார்.
பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
இந்நிலையில், பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை இவ்வளவு குறுகிய காலத்தில் இலங்கை செலுத்த முடியும் என்று தான் நினைக்கவில்லை என பங்களாதேஷ் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடனை செலுத்துவதில் இலங்கை படிப்படியாக அடைந்து வரும் பொருளாதார முன்னேற்றம் வெளிப்படுவதாகவும், அது தொடர்ந்தால் இலங்கையின் நிலை சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் காட்டிய ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், ரணில் விக்ரமசிங்க இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.