கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் சக்ஸஸ் முன்பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பரிசோதனை என்பன வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் இடம்பெற்றன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாது பீ.வசந்தி, பாடசாலை பற்சிகிச்சையாளர் எஸ்.எப்.ஷபாயா மற்றும் சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இவ்விழிப்புணர்வினை வழங்கியதுடன் பரிசோதனையினையும் மேற்கொண்டனர்.
இதன்போது, முன்பள்ளி மாணவர்களின் நிறை, உயரம், உடற் திணிவுச் சுட்டி என்பன மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாது பீ.வசந்தி அவர்களினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சிறுவர் ஆரோக்கிய மற்றும் விருத்திப் பதிவேடு பதியப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட்டது.
மேலும், பாடசாலை பற்சிகிச்சையாளர் எஸ்.எப்.ஷபாயா அவர்களால் முன்பள்ளி மாணவர்களது வாய்வழிச் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் முறையான பல் துலக்குதல் முறை, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாய்வழிச் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியன பற்றி முன்பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டப்பட்டன.