பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இதேவேளை, கல்விக் கொள்கையுடன் முறையான வேலைத்திட்டம் தயாரிக்கவில்லை என்றால் இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ்.டி.ரி.ஐ.கெம்பஸ் நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்றைய தினம் (11.09.2023) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அரச பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்க முடியாமல் போன ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை வெற்றிகொள்ளவதற்காக எஸ்.டி.ரி.ஐ.கெம்பஸ் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கையை மதிக்கிறோம்.

விசேடமாக பட்டங்களை வழங்கும்போது அவை திறன் அபிவிருத்தியுடன் வழங்கவேண்டும். உயர்தர பரீட்சைக்காக தோற்றிய மாணவர்களில் 45 ஆயிரம் பேர் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏனைய இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. அவ்வாறு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தேவையாகும்.

அத்துடன் நாடாளுமன்ற விசேட செயற்குழுவொன்றில் எமது நாட்டின் கல்வி முறைமை தொடர்பாக ஆய்வு செய்து நாங்கள் அறிக்கை ஒன்றை முன்வைத்தோம்.

அரசாங்கம் அமைச்சர் மாறுகின்ற வகையில் கல்விக் கொள்கைகளை மாற்ற இடமளிக்க முடியாது. குறித்த விசேட செயற்குழுவின் தலைவராக செயற்பட்டு நாங்கள் அவ்வாறான பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கிறோம்.

இலங்கையின் கல்வி முறைக்கான கல்விக் கொள்கை கட்டாயம் தேவைப்படுகின்றது. தற்போது இருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் அந்த ஆணைக்குழுவுக்குள் அரச மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தேடிப்பார்க்க இரண்டு விசேட பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெறும் தரத்தை சரிபார்க்க தனியான அமைப்பொன்று இருக்க வேண்டும்.

மேலும் எமது இளைஞர் யுவதிகளுக்கு தரமிக்க கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். இன்று எமது கல்வி முறைமையில் திறன் அபிவிருத்தி அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் திறன் அபிவிருத்தியை முன்னேற்ற வேண்டும்.

நியதிச்சட்ட முறையொன்றின் கீழ் தற்காலத்துக்கு பொருத்தமானவகையில் கல்வி முறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதியும் கவனம் செலுத்தியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையுடன் முறையான வேலைத்திட்டம் தயாரிக்கவில்லை என்றால் இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்றார்.

Recommended For You

About the Author: webeditor