மிக நீண்ட காலமாக பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகர் கிராம மக்கள் அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படாமை தொடர்பில் எழுந்து வந்த போராட்டம் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட பலரின் செயற்பாடுகளின் காரணமாக முதற்கட்டமாக 73 குடும்பங்களுக்கு அங்கு மீள்குடியேற்றப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் 02ம் கட்டமாக மேலதிகமாகவுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவது தொடர்பிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் பிரதித் தவிசாளர் பொ.பார்த்தீபன், பிரதேசசபை முன்னாள் உறுப்;பினர் த.சுபோகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கனகர் கிராமத்தில் 73 பேருக்கான காணி பகிர்ந்தளிப்பு இடம்பெற்றது. அங்கு மேலும் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் தொடர்பில்; ஆராயும் முகமாக இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி பிரதேசத்தில் 202 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும், அதில் ஏற்கனவே 73 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டமையால் மிகுதி இருப்பவர்களுக்கு அங்குள்ள காணி போதாமை தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது தற்போதுள்ள காணிகளை இருக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பது, மேலும் அடாத்தாக காணி அபகரிப்பினை மேற்கொண்டவர்கள் ரீதியில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில் அக்காணிகளையும் விடுவித்து அதனையும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், வன இலாகாவினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற ரீதியிலாக இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.