சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக்கும்பலின் முக்கிய தலைவருமான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக, துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை சர்வதேச பொலிஸார் நேற்று இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 30 நாட்களுக்குள் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரும்,சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் போது கடந்த 11ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் சென்ற போது பயன்படுத்திய போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பு
கைது செய்யப்பட்ட ஹரக் கட்டாவின் முகத்துடன் இறந்த நபரின் தகவலைப் பயன்படுத்தி போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை,நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைகள் ஹரக் கட்டாவின் வலிக்காட்டலில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ‘ஹரக் கட்டா’ துபாயில் இருந்து இலங்கைக்கு பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பல்வேறு முறைகளில் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹரக் கட்டாவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றைய நபர் கொட்டிகாவத்தை முல்லேரிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் சுமுது ருக்ஷானின் கொலைக்கு தலைமை தாங்கியவர் என சந்தேகிக்கப்படுகின்றது.