இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்யும் முறைமையை நீக்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு திறைசேரி இந்த பரிந்துரையை செய்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள திட்டம் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உத்தியோகபூர்வ மற்றும் சட்ட வழிகள் மூலம் நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியை அனுப்ப ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
எனினும் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் பணம் போதுமானதாக இல்லை என்றும், இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகளும் போதுமானதாக இல்லை என்றும் திறைசேரி கண்டறிந்துள்ளது. அத்துடன் இத் திட்டம் நிதி ரீதியாக பலனளிக்கவில்லை என்றும் திறைசேரி கண்டறிந்துள்ளது.
மின்சார வாகனங்களை இறக்குமதி
எனவே, இந்த திட்டத்திற்கு மேலும் நீடிப்பு வழங்க வேண்டாம் என திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. இதேவேளை வாகன இறக்குமதியை அனுமதித்தால், எந்தவொரு குறிப்பிட்ட குழு மாத்திரம் பயனடையக்கூடாது.
அனைத்து துறைகளுக்கும் சமமான முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலையும் இங்கு திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சலுகை அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் திறைசேரிக்கு கிடைத்துள்ளன.
அதேநேரம் நடைமுறை ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய 100க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் திறைசேரி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டால் வருடத்திற்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டியிருக்கும் என திறைசேரியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.