வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி இன்றைய தினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்டோரின் உறவுகளின் சங்கங்களும் போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு பேரணி மன்னார் ‘சதொச’ மனித புதைக்குழி வளாகத்திலிருந்து ஆரம்பமாகி பேரணியாக மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப்பூங்கா வரை பேரணியாக சென்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவ அமைப்புகள், தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேவேளை காணாமல் போயுள்ள தங்களது உறவினர்களின் நிலைமை குறித்து தகவல் இன்றி இலங்கை முழுவதிலும் உள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் துன்பமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச காணாமல் போனார் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனோர் உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது இறந்து விடடார்களா? என்று தெளிவற்ற நிலையில் வாழும் அவர்களது குடும்பங்களுக்கு அது வேதனையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.
காணாமல் போயுள்ள தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவது மிகவும் அவசியமான தேவையாகும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.