கொழும்பில் சட்டவிரோதமாக சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகம் செய்த சீன பிரஜைக்கு கோட்டை நீதவான் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ள சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட, சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார், கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25.08.2023) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே ஒரு மில்லியன் ரூபா அபராதத்தை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சீனப் பிரஜையிடமிருந்து சுமார் 6,400 சிகரெட்டுகளை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பெறுமதி சுமார் 760,000 ரூபாய்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, காலி மாகல்ல பிரதேசத்தில் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 52 வயதுடைய ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை சிகரெட்டுகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.