நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையோரத்தில் மூன்று நாட்களுக்குள் சுமார் 20 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ ஆகிய கடற்கரையோரங்களில் இருந்து இந்த இறந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், வனவிலங்கு திணைக்களம் இறந்த நிலையில் ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எனினும், கடலின் அடிப்பாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஆமைகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த ஆமைகளின் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இறந்த அனைத்து ஆமைகளும் ஒரே அளவு மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று இதற்கிடையில், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், மேற்படி கடல் பகுதிகளில் உள்ள நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் நாரா அறிவித்துள்ளது.