இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மூத்த அரசியல்வாதிகளின் எந்த விதமான ஒத்துழைப்புமின்றி அரசாங்கத்தில் செயற்படுவது சிக்கலாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (22.08.2023) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது பின்வருமாறு தெரிவித்தார்.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எம்மோடிணைந்து முன்வந்து ஒத்துழைத்தால் நாம் முன்னோக்கி நகர முடியும்.
மேலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயற்படவில்லை என்றும் மாத்தளை விவகாரத்தில் தான் செயற்பட்டது ஆதங்கமே தவிர அரசியலை நோக்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் சிறுபான்மை இனத்திலிருந்து இலங்கையர்களாக மாற வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இன்று மலையகத்தை பல இனம் சார்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்படுகின்றார்கள். எனவே தமிழர்களை மட்டுமல்லாது சிங்கள முஸ்லீம் பிரதிநிதிகளையும் அழைத்து ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.