இலங்கையில் உயர்நிலைப் பாடசாலையின்போது தேசிய மாணவர்ப் படையில் சிங்கப்பூர் ஆயுதப் படையைப் பற்றி கற்றுக்கொண்ட ‘லெஃப்டினன்ட்’ யுகராஜ் கார்த்திக், தற்போது 24 வயதில் ஒரு போர்விமானியாகச் செயல்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி மாளிகையில் ஒகஸ்ட் 14ஆம் திகதியன்று சிங்கப்பூர் ஆயுதப்படையின் கல்விமான் விருது பெற்ற 97 பேரில் திரு யுகராஜும் ஒருவர். ஆக உயரிய கல்வி விருதான அதிபர் கல்விமான் விருதிற்கு அடுத்த நிலையிலான விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுகராஜ் தந்தை ‘செட்ஸ்’ நிறுவனப் பணிமனை ஊழியர், தாயார் இல்லத்தரசி மற்றும் யுகராஜுக்கு ஓர் அக்காவும் இருக்கிறார். சிறு வயதிலிருந்தே யுகராஜ் விமானத்தைப் பறக்கவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
உயர்ந்த நோக்குடன் சேவையாற்றவேண்டும் என்ற சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் கொள்கை தம்மைக் கவர்ந்திருந்ததாகவும் இவர் தெரிவித்தார்.
15 வயதில் மாணவர்ப் படையில் இருந்தபோது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையினரை முதன்முதலாகச் சந்தித்து போர் விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மறக்க முடியாதது என்றார்.
“ஃபோக்கர்-50 என்ற விமானத்தில் நானும் சில மாணவர்களும் பயணம் செய்தோம். விமானத்திலிருந்து நகரக் காட்சிகளைக் காணும்போது என் சிறுவயது கனவு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அந்த அனுபவம் என் மனதில் ஆழப் பதிந்தது,” யுகராஜ் தெரிவித்துள்ளார்.
தொடக்கக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் போர் விமானியாகும் லட்சியத்தை உறுதிப்படுத்தியதாக யுகராஜ் கூறினார்.
தேசிய சேவையின் அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு ஆள்சேர்ப்பு அதிகாரி ஒருவர், சிங்கப்பூர் ஆயுதப் படையிலும் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையிலும் உள்ள மானிய வாய்ப்புகளைப் பற்றி பகிர்ந்தபோது யுகராஜ், தமது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணி விண்ணப்ப விவரங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதிகாரி பயிற்சிப் பாடசாலையில் சேர்வதற்கு முன் விமானி ஆவதற்கான தகுதியை அளவிடும் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார். ஆயுதப்படை அதிகாரியாகத் தகுதிபெற்ற பிறகு இவர் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் பயிற்சி மேற்கொண்டார்.
விமானியாகத் தகுதிபெறுவது கடினம் என்றாலும் எந்தெந்த அம்சங்கள் தன் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவற்றின் மீது கவனம் செலுத்தியதாக இந்த இளையர் கூறினார்.
“விமானப் பயணத்திற்கான தயாரிப்புப் பணிகளை இயன்ற அளவு சிறப்பாகச் செய்து, சிரத்தை எடுத்துப் படித்து பயிற்றுவிப்பாளர்களிடம் வழிகாட்டுதலைப் பெற்று என் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வேன்,” என்றார் யுகராஜ்.
பிரித்தானியாவின் சவுத்ஹேம்ப்ட்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் வரும் செப்டம்பர் மாதம் படிப்பைத் தொடங்கவிருக்கும் யுகராஜ், வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்பை நல்கிய இந்த விருதை நினைத்து நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார்.
இந்தக் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்தி ஆயுதப்படையில் பணியாற்றும் சேவையாளர்களின் மீது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார் யுகராஜ்.
எதிர்காலத்தில் போர்விமானியாக விரும்புவோர், சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையைப் பற்றி நன்கு படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் யுகராஜ்.
எந்த வேலையாக இருந்தாலும் கவனத்துடன் செய்யுமாறு அறிவுறுத்தும் யுகராஜ், இலக்கை அடையும் வழியில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் உறுதியுடன் போராடி வெல்லவேண்டும் என்றார்.
தேசிய மாணவர்ப் படையில் இணைவதுடன் இளம் விமானிகள் சங்கம் போன்ற அமைப்புகளை நாடி விமானியாக விரும்பும் இளையர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இளையர் யுகராஜ்.