கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் அமைந்துள்ள இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வந்த இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(15.08.2023) உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பீகாரில் வசிக்கும் தீபக் குமார் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த இளைஞன் கடந்த 5ஆம் திகதி இரவு பணி மாறுதலுக்காக தொழிற்சாலைக்கு வருகைத்தந்து 06 இந்தியர்களுடன் இணைந்து இரும்பை கொப்பறைக்குள் ஊற்றிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் உட்பட 07 பேர் காயமடைந்து கஹதுடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது, நான்கில் மூன்று பங்கு இரும்பு பாத்திரத்தில் போடப்பட்டிருந்ததாகவும், அப்போது அந்த இரும்பு 1,400 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் திரவமாக இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இறந்த இளைஞனும் அவரது குழுவினரும் வெளியில் இருந்து இரும்பை உறுக்கிக்கொண்டிருந்த போது அவர்களின் முகம் மற்றும் தலையைத் தவிர, அவர்களின் உடலின் அனைத்து பகுதிகளும் அதிக வெப்பம் கொண்ட இரும்பு திரவம் ஊற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.