கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற இறால் பண்ணை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை நிவரத்தி செய்யும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாட்டுக்கு டொலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் இறால் பண்ணைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தறிந்தபோது ஒருசில இறால் பண்ணைகளின் செயற்பாடுகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் களப்பு பிரச்சினையையும் இறால் பண்ணைகளின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று குழப்பிக் கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக நாரா, நக்டா, சிலாடா மற்றும் கடற்றொழில் அமைச்சின் நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்றை அமைப்பதற்கு நவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நாரா, நக்டா, சிலாடா நிறுவனங்களின் உயரதிகாரிகள், முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, மற்றும் புத்தளம் மாவட்ட இறால் பண்ணை உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.