இலங்கையில் உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக மக்களுக்கு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும்.
ஒவ்வொரு குடிமகனையும் உரிய இலக்கத்தின் மூலம் அடையாளம் காணும் முறைமையொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அறிமுகமாகவுள்ள இலக்கம்
இன்று இந்தியாவில் வீதியோரம் சென்று ஒரு கப் தேநீரை கடையில் வாங்கினாலும், இந்தியர்கள் ஆதார் எனப்படும் க்யூஆர் குறியீடு மூலம் 5 அல்லது 10 ரூபா பணத்தை கூட செலுத்துகிறார்கள்.
அந்த முறை சிறிது காலம் கழித்து இலங்கைக்கு வரும். அதன் அடிப்படை அடித்தளத்தை நிறுவுவதற்கு சுமார் ஒரு வருடம் ஆகும். அனைவருக்கும் அடையாள எண் கிடைக்கும்.
அது தேசிய அடையாள அட்டை எண் அல்ல. அந்த எண்ணின் மூலம்தான் எல்லாமே நடக்கும். மருத்துவமனைக்கு சென்றாலும், அரச அலுவலகத்துக்கு சென்றாலும் அனைத்தும் அந்த எண் மூலம்தான் நடக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.