யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அதிபரால் கூட்டம் போடப்பட்டு மாணவர்களும் ஏனையோரும் தவறாக வழிநடத்தப்பட்ட விடயங்கள் கண்டறியப்பட வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்.
யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த 07.08.2023 ம் திகதி உயர்தர மாணவர்கள் சிலரை ஐந்து பாடவேளைகள் வெயிலில் வெளியே விட்டு தண்டனை வழங்கப்பட்டமைக்கு ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிபரின் குறித்த தவறினை மூடிமறைக்கும் நோக்கில், மாணவர்களை தவறான முறையில் பயன்படுத்தும் அதிபரின் செயற்பாடு தொடர்பாக வடமாகாண கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாடசாலையின் CCTV தொகுப்புகள் உடனடியாக கண்காணிக்கப்பட்டு, அதிபரால் கூட்டம் போடப்பட்டு மாணவர்களும் ஏனையோரும் தவறாக வழிநடத்தப்பட்ட விடயங்கள் கண்டறியப்பட வேண்டும்.
இன்றையதினம் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருடன் இணைந்து பொலிஸாரும் விசாரணை நடத்தியுள்ள நிலையில் – முடிவுகள் கண்டறியப்பட முன்னர் விசாரணைகளைத் திசைதிருப்பும் நோக்கில் மாணவர்களைத் தவறாக வழிநடத்தும் அதிபரின் செயற்பாடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குறித்த அதிபரின் முறைகேடுகள் மற்றும் பாடசாலை சிற்றுண்டிச் சாலையை வேறு ஒருவரது பெயரில் தானே பெற்று, பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் புகைப்பட ஆதாரங்களுடன் வடமாகாண கல்வி திணைக்கள விசாரணைக்குழுவுக்கு வழங்கியிருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறித்த அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதாரங்களுடன் வழங்கிய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய தவறானவர்களின் செயற்பாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
யூனியன் கல்லூரி விவகாரம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணையின் மூலம் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது.
ஆ.தீபன் திலீசன்
உபதலைவர்
இலங்கை ஆசிரியர் சங்கம்.