இலங்கை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர்,யுனிசெப் அமைப்பின்

ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வசதியுடைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் அமைப்பினால் மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி நடைப்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திலுள்ள, பல்லேகணுகல கனிஷ்ட வித்தியாலயத்தில் குறித்த பயிற்சி நிகழ்வு நேற்று (07.08.2023) திங்கட்கிழமை நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி நிகழ்வொன்றை சச்சின் டெண்டுல்கர் நடத்தினார்.

துடுப்பாட்டத்தில் ஏராளமான உலக சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கர் பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கினார்.

யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ணத் தூதுவராக 2013 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் உட்பட 15921 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 463 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 49 சதங்கள் உட்பட 18426 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor