வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

 

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சார்பாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகளின் நேரடி, இணையவழி பங்குபற்றுதலுடன் ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட யாழ். போதனா வைத்தியசாலை எலும்பியல் வைத்திய நிபுணர் கோபிசங்கர், மேல் மாகாணத்துக்கு அடுத்தபடியாக அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறும் மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதாகக் கூறினார்.

 

போதியளவு வீதிப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை, வர்த்தக நிலையங்கள் சந்தைப்படுத்தலுக்காக வீதிகளைப் பயன்படுத்துகின்றமை, முறையற்ற வாகனத்தரிப்பிடங்கள், நடைபாதையற்ற வீதிகள் முதலிய பலவும் இதற்குப் பிரதான காரணமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவற்றைக் கேட்டறிந்த ஆளுநர். வர்த்தக நிலையங்களுக்கு முன்னே விளம்பரங்கள் செய்ய வீதிகளை பயன்படுத்துதல், வாகனங்களை நிறுத்துதல் முதலியவற்றால் பாதசாரிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், எனவே இவற்றைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

 

வைத்தியசாலைக்கு வந்து செல்லும் பயணிகளை இலக்காகக் கொண்டே பொதுப் போக்குவரத்து சேவைகள் செயற்படுவதால், யாழ். போதனா வைத்தியசாலை வீதியைச் சுற்றி பேருந்துகளின் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனால் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்கு, வைத்தியசாலை வீதியைத் தவிர்த்து மாற்றுப் பாதையூடாக பிரதான வீதிப் போக்குவரத்து மார்க்கத்தை பயன்படுத்த பேருந்துக்களை ஊக்குவிப்பதுடன், வைத்தியசாலைக்கு வந்து செல்பவர்களுக்கான குறுகிய போக்குவரத்துச் சேவைக்கான வேறொரு ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது.

 

மேலும், வைத்தியசாலை வீதியின் நடுவில் உள்ள வாகனத் தரிப்பிடத்திலேயே வாகனங்களை நிறுத்துவதால் அதிக விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உருவாகுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டு, அதை மாற்றி, வைத்தியசாலை வீதியை ஒருவழிப் பாதையாக மாற்றக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

வீதிகளுக்கு நடுவே வாகனத்தரிப்பிடங்கள் இருப்பது மிகவும் பழமையான ஒரு நடைமுறை என்று இங்கு சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இனிவரும் காலங்களில் நிலக்கீழ் வாகனத்தரிப்பிட முறைகளுக்கு நாம் செல்லவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் எங்கே, எப்படி, எப்போது நடைபெறுகின்றன என்பது தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு உண்மையான பிரச்சினைகளைச் சரியாக இனங்கண்டு, அதன்பின்னர் வீதிப்பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் எவ்வாறு விபத்துக்களைக் குறைக்கலாம் என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

ஆய்வில் இனங்காணப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பான போக்குவரத்து வாரம் ஒன்றை அனுஷ்டித்து அதில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

நெடுந்தூரப் பயணங்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் பல மணி நேரங்கள் கடமையில் ஈடுபடுவதால் அவர்கள் களைப்படைதல், நித்திரையாகுதல் போன்றவற்றால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர்களுக்கான ஓய்வுடன், புத்துணர்ச்சியை வழங்கும் வகையில் ஏற்கனவே புளியங்குளம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட தரிப்பிட வசதியை விரிவாக்கி விரைவில் நடைமுறைப்படுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

 

மேலும், பாடசாலைகளில் மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான சட்டதிட்டங்கள், ஒழுங்குமுறைகள் பற்றி தெளிவு படுத்துவதால் இனிவரும் காலங்களில் விபத்துக்களைத் தடுக்க முடியும் எனவும், மக்கள் மத்தியில் வீதிப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கல்வி அமைச்சு, சுகாதாரத்துறை, பொலிஸ் திணைக்களம், மாநகரசபை, உள்ளூராட்சி சபைகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் திணைக்களம், வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை முதலியன இணைந்து, மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையில் வீதிப்பாதுகாப்பு தொடர்பான குழுவினை உருவாக்கி அதன் மூலம் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN