புத்தரோடு யாழ். பல்கலையினுள் புகுந்த மர்ம வாகனம்! புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை!
நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்கு கலைப்பீட 3ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார். அதனையும் மீறிச் சென்ற மாணவர்கள் கொடிகள் கட்டுவதை தடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது. இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது.
இதன்போது குறுக்கிட்ட கலைப்பீட தமிழ் மாணவர்கள், புத்தர் சிலையை பல்கலைக்கழக வளாகத்தினுள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் மாணவர்களை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, “நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்” என்றனர்.
அதனையு மீறி தடுக்க முடியாத கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கிருந்து அகன்றனர். ஆனால் அந்த மர்மம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.
இந்நிலையில் இன்றையதினம் சட்ட நிறைவேற்று அதிகாரி வெங்கட் ரமணன் மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா ஆகியோர், நேற்றையதினம் புத்தர் சிலை வைத்து வழிபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலைப்பீட தமிழ் மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகமானது தமது கதிரைகளை தக்க வைப்பதற்காக அடுத்தடுத்த கட்டங்களில், பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை வைத்துவிட்டு விகாரை கட்டுவதற்கும் அனுமதி கொடுக்கும் என பல தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.