வவுனியா – தோணிக்கலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை 24 மணித்தியாலம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியாவில் வீடொன்றிற்குள் புகுந்து குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த 21 வயதான பாத்திமா சமீமா என்ற இளம் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவத்தில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கணவனான ச. சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வாளர்கள், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவு பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன், இச் சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதலுக்காக கொண்டு வரப்பட்ட 3 வாள்கள் மற்றும் ஒர் கோடாளி அப்பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் வவுனியா, தவசிக்குளம், நெளுக்குளம், சிவபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் திரு.பி. அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா அவர்களின் இல்லத்தில் பொலிஸார் இன்று (01) மாலை ஆயர்படுத்தியமையுடன் சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இதன் போது 24 மணிநேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆயராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துளைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்ட ஜந்து சந்தேகநபர்களும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டமையுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.