பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (26.07.2023) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கொழும்பு அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பேலியகொட பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரால் நேற்று (25.07.2023) நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (3) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும், அந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பேலியகொட மெனிங் சந்தையிலுள்ள கடைகளை வெளியாட்களுக்கு வழங்குவதாக குற்றம் சுமத்தி, பொது சந்தை சங்கம் இன்று (26) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெலிஸார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்தே மேற்கண்டவாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.