யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்துவந்த சிறுமி
கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்
தொடர்பாக அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்ட வடக்கு மாகாண
ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் இதுதொடர்பாக உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்
உத்தியோகத்தர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடனும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும்
இதுதொடர்பாக அவசரமாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடிய ஆளுநர் இதில்
குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருப்பதாக அடையாம் காணப்பட்டால்
சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை விரைவாக
மேற்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான உண்மை என்ன என்பதை தீர விசாரித்து அறியுமாறு
கூறியுள்ள ஆளுநர் அவர்கள் ஆளுநர் செயலகத்தின் தொடர்புபட்ட
அலுவலர்களையும் இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை
மேற்கொண்டு பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.
பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகள்
இன்னும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறிய
ஆளுநர் அவர்கள் இது தொடர்பான தமது ஆழ்ந்த கண்டனத்தை வெளியிட்டதுடன்
இந்தச் சம்பவம் ஒரு குற்றச்செயலாக அமைந்திருப்பின் அதுதொடர்பில்,
குற்றமிழைத்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை
எடுக்கப்படுவதை ஆளுநர் செயலகம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும்ää
இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க தேவையான காத்திரமான
நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுப்பதையும் செயலகம் உன்னிப்பாக
அவதானிக்கும் என்று தெரிவித்தார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகளை தடுக்கும்
வேலைத்திட்டங்களையும் வேகமாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள அவர், பொதுமக்களும் இவ்வாறான
சம்பவங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாணம் தழுவிய அளவில் பெண்கள் மற்றும் சிறுவர் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பாகää வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின்
அதிகாரிகளுடன் மாகாணத்தின் 5 மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச
செயலகங்களின் சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் ‘சூம்’ தொழில் நுட்பம் மூலம்
இணைத்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்த ஆளுநர் அவர்கள்
அடையாளம் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன்
அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும் பணிப்புரை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.