மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு   நிதியுதவி 

மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி  கையளிப்பு
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட  100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல ‘ என்ற அடிப்படையில்  ஊக்குவிப்பு உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டதுடன் அண்மையில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் இடம் பெற்ற தனியார் பேருந்து  விபத்தில் மரணம் அடைந்த மற்றும் பாதிப்படைந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் கடந்த புதன்கிழமை (19) மாலை  வழங்கி வைக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஊகவியலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் ஒட்டமாவடி பிரதேச சபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்குறித்த உதவிகள் யாவும் தியாகி அறக்கொடை  நிதியத்தின் தலைவர்  கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரனின்  சொந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜயசேகர கலந்து சிறப்பித்தார். 
 
மேலும்  இந் நிகழ்வின் அதிதிகளாக 23 வது படைத்தலைமையகத்தின்  கட்டளைத்தளபதி பிரிகெடியர் நிலந்த பிரேம ரத்தின,வாகரை 233 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் கமல் டி சில்வா, 232 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் அசித்த புஷ்பகுமார,ஓட்டமாவடி  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நெளபர்,ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்-அமீன்,கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மிர்,ஓட்டமாவடி  பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸத்தீன்,வாழைச்சேனை,கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளான லசந்த பண்டார, சந்திரகுமார மற்றும் ஓட்டமாவடி  வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜி உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வேலை திட்டத்தின் மூலம் பல்லின மாணவ சமூகத்தை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதன்  ஊடாக   நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவித்தல் நாட்டின் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும்  நோக்கி பயணிக்க முடியும் என ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர்  எம்.ரீ.எம். பாரிஸ் குறிப்பிட்டார். 
 
இந்த அடிப்படையிலேயயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த 
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் சொந்த நிதியின் மூலம் இம் மாணவர்களுக்கான மாதாந்த உதவித் தொகைகள் அவர்களின் கற்றல் காலம் முடியும் வரை வழங்கி வைக்கப்படவுள்ளது.
 
தொடர்ந்தும் அவர் இவ்வாறான மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/fu4knXzbhbc

Recommended For You

About the Author: S.R.KARAN