இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய மீன்பிடி சட்டங்களால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுமா? என கேள்வி எழுப்பிய வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் முஹமட் ஆலம், புதிய சட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். பாடி விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ், மீன்பிடிச் சட்டங்களை திருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.
ஏற்கனவே பல மீன்பிடிச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தாது கிடப்பில் கிடக்கின்றது.
ஆனால், தற்போது அமைச்சர் மீன் பிடிச் சட்டங்களை திருத்துவதாக அறிவித்துள்ள நிலையில் புதிய சட்டத்தால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
தென்னிலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்பின் ஊடாக அரபிக் கடலில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட வழிவகை ஏற்படுத்தும் செயற்பாடுகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதிய சட்ட திருத்தங்கள் தொடர்பில் எமக்குச் சந்தேகம் வருகிறது.
புதிய மீன்பிடிச் சட்டங்கள் தொடர்பில் என்னென்ன சட்டங்கள் திருத்தப்பட போகின்றது. எந்தச் சட்டங்கள் நீக்கப்பட உள்ளன என்பது தொடர்பில் முன்கூட்டியே அமைச்சருடன் கலந்துரையாட விரும்புகிறோம்.
ஆகவே, கடற்றொழில் அமைச்சர், வடமாகாண மீனவ சங்கங்களை அழைத்து சட்டத் திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்தார்.