இந்திய ரோலர்களை தடைசெய்ய தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

இந்தியாவிற்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோணிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அதில் பேசப்பட்ட விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

அதில் 13 ஆவது திருத்தச் சட்டம், தமிழரின் இனப் பிரச்சினை மற்றும் முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ள நிலையில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.

மீனவ சங்கங்களாகிய நாம் ஒன்றை கேட்க விரும்புகிறோம். இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் எமது மீனவர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்வது தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு எந்தவிதமான கடிதங்களும் அனுப்புவதாகத் தெரியவில்லை .

தமிழ்க் கட்சிகளிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். எமது மீனவ சமூகம் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய இழுவைப்படகுகளை கடற்படை கைது செய்துவரும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ச்சியாக எல்லை தாண்டிய இந்திய ரோலர்களை கைது செய்ய வேண்டும்.

இந் நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டவிரோத எல்லை தாண்டிய இந்திய ரோலர்களை கைது செய்வதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு போதிய கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நின்று எமது பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணமும் கலந்து கொண்டார்.

Recommended For You

About the Author: S.R.KARAN