இலங்கையில் கட்டுப்பாட்டு விலையை மீறி சந்தையில் முட்டை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த கட்டுப்பாட்டு விலைக்கு முட்டையை விற்பனை செய்வதனை உறுதி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அதிகாரசபை சுற்றி வளைப்புகள்
வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபா எனவும் சிவப்பு முட்டை ஒன்று 48 ரூபா எனவும் வர்த்தக அமைச்சினால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் நேற்றையதினம் (06.07.2023) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவிற்கு அதிகமாக காணப்பட்டதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதனை தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போது சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவியது.
உள்நாட்டு சந்தையிலும் முட்டை நிரம்பல்
தற்போது இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ள நிலையில் உள்நாட்டு சந்தையிலும் முட்டை நிரம்பல் செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் முட்டை வகைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மட்டும் வழங்கக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதனை தொடர்ந்து மீண்டும் தற்பொழுது முட்டைக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விலை நிர்ணயம் செய்யப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் முட்டைக்கான விலை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக விவகார அமைச்சு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் இதுவரையில் வெளியிடவில்லை.